யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு முன்பாக கையெழுத்து போராட்டம்

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளுக்கும், நடைபெற்ற இனப்படுகொலைக்குமான "சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு முன்பாக, வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் குறித்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா பிரகாஸ், மற்றும் சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
சர்வதேச நீதி கோரிய குறித்த கையெழுத்துப் போராட்டம் தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகி வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் தாகசாந்தி நிலையமும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








