போராடும் தமிழினத்தின் போராட்டகுணத்தை சிதைக்கும் சதியே கதவடைப்பு போராட்டம்

தி. திபாகரன், M.A. 21-08-2025.
நூற்றாண்டு காலமாக தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைக்காக தொடர்ந்து போராடுகிறார்கள். அரசியல் தலைமைகளின் தவறான முடிவுகளினாலும், தவறான செயல்களினாலும் தமிழ் மக்கள் தொடர்ந்து ஒரு நூற்றாண்டு காலமாக தோற்கடிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். தொடர் தோல்விகளை கண்டாலும் துவண்டு போகாமல் தொடர்ந்தும் தமிழ் மக்கள் போராடுகிறார்கள். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னும் தமிழ் மக்கள் போராட தயங்கவில்லை. தொடர்ந்தும் போராடும் மனோதிடத்துடன் உள்ளார்கள்.
இந்த நிலையில் இன்றைய இடதுசாரி அனுரா அரசாங்கத்துக்கு சேவகம் செய்யவும் கையாட்களாக மாறிய தமிழரசு கட்சி தமிழ் மக்களின் எழுச்சி போராட்டங்களை அழிப்பதற்கான திட்டமிட்ட நாசக்கார சதியில் ஈடுபட்டள்ளனர். இதன் ஒரு பகுதியாகவே திடீரென கதவடைப்பு போராட்டம் என ஒன்றை அறிவித்தமை அமைந்துள்ளது. தமிழ் மக்களின் அரசியல் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டங்களை வலுவிழக்கச் செய்வதற்கும், இல்லாத ஒழிப்பதற்குமான ஒரு திட்டமிட்ட சதியாகவே ஒரு கதவடைப்பு போராட்டத்தை அறிவித்து, அந்தப் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பெரிய அளவிலே பங்களிப்பைச் செய்யாமல் திட்டமிட்டு அதனையும் குழப்பி, வலுவற்றதாக மேற்கொள்ளப்படுகின்ற இந்தப் போராட்டத்தின் மூலம் தம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தையே வேண்டுமென்றே பிசுபிசுத்துப் போகச் செய்தார்கள். இவ்வாறு கதவடைப்பு போராட்டத்தை பிசைபிசுக்க வைப்பதன் மூலம் இனிமேலும் தமிழ் மக்கள் அரசியல் உரிமைகளுக்காக போராட தயார் இல்லை என்பதை உலகுக்கு காட்டி விட்டார்கள். இதனைத்தான் அனுர அரசாங்கம் விரும்பியது. அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி கொடுத்து விட்டார்கள் தமிழரசு கட்சியினர். தமிழினவழிப்பு, அடக்குமுறைக்கு துணைபோன குற்றத்தை தமிழின வரலாற்றில் என்றும் மன்னிக்க முடியாது.
தமிழ் மக்கள் சாத்வீக வழியிலும், ஆயுத வழியிலும் எத்தகைய விட்டுக்கொடுப்பின்ரி, சமாச்சாரத்துக்கு இடமின்றி சுயநிர்ணய உரிமைக்காக சளைக்காது போராடிய மக்கள் கூட்டம். தமக்கு எத்தனை தோல்விகள் வந்தாலும், எத்தனை இழப்புகள் வந்தாலும், மரணித்து விழ விழ மீண்டும் மீண்டும் எழுந்து முன்னோக்கி பாய்ந்து போராடிய மக்கள் கூட்டம். இத்தகைய போராட்ட குணம் உள்ள தமிழ் மக்கள் கூட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இந்த வாரம் திடீரென கதவடைப்பு போராட்டம் என ஒன்றை அறிவித்தமை, சரியான காரணங்கள் இன்றி, சரியான கால அவகாசம் இன்றி, தவறான பொருத்தப்பாடற்ற வியாக்கியானங்களை கொடுத்து, தமிழ் மக்களை குழப்பியது மாத்திரமல்ல போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தை கொண்டே திட்டமிட்டு தமிழரசு கட்சி தலைமைகள் இந்தப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.
ஜனநாயக வழிகளான மக்கள் எழுச்சிபோராட்டங்கள் ஒன்று திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அல்லது சடுதியான ஏற்படுகின்ற விளைவுகளினால் மக்கள் இயக்கமாகத் திரண்டு அதனுடாக மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய ஒரு மக்கள் இயக்கமாக திரட்சி அடையும் ஒரு உணர்ச்சிகரமான சூழல் இன்றைய நிலையில் ஈழத் தமிழர்களிடம் இல்லை. ஆனால் அத்தகைய ஒரு சூழல் இனிமேலும் தோன்றாது என்றும் கூற முடியாது. மக்களின் மனதை தொடக்கூடிய, மக்களுக்கு சினமூட்டக்கூடிய, மக்களுக்கு வெறுப்பூட்டக்கூடிய, மக்களை உணர்ச்சி வசப்படக்கூடிய நிகழ்வுகள் சிங்களப் பௌத்த பேரினவாதத்தால் நிகழ்த்தப்பட்டால் அத்தகைய மக்கள் இயக்கங்கள் தோன்றவும், மக்கள் பொங்கி எழுந்து தெருவிற்கு வந்து நிச்சயம் போராடுவார்கள்.
இவ்வாறு மக்கள் இயக்கமாக பொங்கி எழுந்த அண்மைக்கால சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்தது. 2020 மே 25ல் ஜோர்ஜ் ஃப்ளாய்டின் என்ற கன கருப்பு இன இளைஞன் போலீசாரினால் கழுத்தில் நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு எதிராக 2020 மே 26ல் அமெரிக்க மக்கள் கிளர்ந்து தெருக்களில் இறங்கினர்.“I can’t breathe” (நான் சுவாசிக்க முடியவில்லை) என்பது போராட்டத்தின் கோஷமாக முழக்கமாக மாறியது. அமெரிக்க சுதந்திரப் போருக்கு பின்னர் அமெரிக்க வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய போராட்டம். இதனை ஒரு மாபெரும் மக்கள் கிளர்ச்சி என்று குறிப்பிட வேண்டும். 15 முதல் 26 மில்லியன் வரையிலான மக்கள் இனவெறிக்கு எதிராக தெருக்களில் இறங்கி குரல் கொடுத்ததாக மதிப்பிடப்படுகிறது.
இதுவே அமெரிக்க வரலாற்றில் நடந்தறிய மிகப்பெரிய மக்கள் இயக்கம் எனக் கருதப்படுகிறது.
மரணமடைந்த கரப்பின இளைஞனன் மரணிக்கும் போது அவர் வாயில் இருந்து உதித்த இறுதி வார்த்தையான “I can’t breathe” என்பது ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரலாக மாறி, சமூக நீதி, மனித உரிமைகள், காவல் சீர்திருத்தம் ஆகியவற்றை வலியுறுத்திய உலகளாவிய போராட்டத்தை தூண்டியது போன்ற ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வுகளுக்கு பின்னையே பெரும் மக்கள் எழுச்சியும் மக்கள் இயக்கமும் தோற்றம் பெறும் அத்தகைய மக்கள் இயக்கமும் மக்கள் கிளர்ச்சியுமே உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் அதுவே ஆட்சியாளர்களை ஆட்டம் காண வைக்கும்.
ஆனால் இலங்கைத் தீவில் ஈழத் தமிழ அரசியலில் அத்தகைய ஒரு நிகழ்வுக்கு அல்லது சம்பவம் நிகழவில்லை ஆதலால் மேற்படி மக்கள் இயக்க போராட்டங்கள் எழுவதற்கான களச் சூழல் இல்லை. எனவே இன்றைய நிலையில் திட்டமிடாமல் கொழும்பில் இருந்து கொண்டு ஒருவர் எடுத்த முடிவை ஒரு கட்சியின் முடிவாகி ஒரு போராட்டத்தை அறிவிப்பது என்பது மிகத் தவறாகும்.
இத்தகைய ஒரு போராட்டத்தை அறிவிப்பதற்கு ஒட்டிசுட்டான் பகுதியில் கொல்லப்பட்ட இளைஞனின் கொலை சம்பந்தமான சம்பவத்தின் விடையப்பரப்பு தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியும். ஆகவே இந்த சம்பவத்திற்காக ஒரு போராட்டத்தை நடத்துவதற்கான விருப்பத்தை மக்களுக்கு கொடுக்கவில்லை. காரணம் கொல்லப்பட்ட இளைஞன் போதைப் பொருள், மற்றும் சட்டத்துக்கு முரணான, சமூக விதிகளுக்கு முரணான செயல்களில் ஈடுபட்டமை போன்றவற்றினால் ஒரு தவறான நபனின் கொலைக்காக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை என்கின்ற இலட்சியத்தை முன்னிறுத்தி போராட்டத்துக்கு அழைப்பது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும், தமிழ் மக்களுடைய தேசிய விடுதலை போராட்டத்தை நியாயத்தின்பால் இருந்து விலகிச் செல்வதாகவும் அமைவதாகவே மக்கள் கருதுகின்றனர். இந்நிலையில் இச்ச சம்பவத்தின் பெயரால் நீதி கோருவது வேறு. ஆனால் இதன் பெயரால் ஒரு தமிழ்த்தேசிய எழுச்சி போராட்டத்தை அறிவித்து அதற்கு வேறு காரணங்களையும், வேறுபட்ட இலக்கை கொண்ட கோஷங்களையும் முன்வைத்து போராட்டத்தை மேற்கொள்வது என்பது மிகத் தவறானது.
அதுமட்டுமல்ல இலங்கைத் தீவில் கதவடைப்பு என்பது ஒரு போராட்ட வடிவமாக இன்று கருதப்படுவதில்லை. இன்றைய உலகமும் அதனை போராட்டமாக கருதமாட்டாது. அதுவும் குறிப்பாக இலங்கையின் இடதுசாரி அரசாங்கம் தமிழ் மக்களின் கதவடைப்பு போராட்டத்தை ஒரு போராட்டமாக கருத்தில் எடுக்கவும் மாட்டார்கள். தமிழரசு கட்சி நடத்திய போலிநாடக கதவடைப்பு போராட்டம் அரசாங்கத்துக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும் போராட்டமாகவே அமைந்துள்ளது.
அப்படியானால் எதிரிக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய, எதிரிக்கு நிம்மதியை அளிக்கக்கூடிய, எதிரிக்கு எந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தாத, எதிரிக்கு எந்த நிர்பந்தத்தை ஏற்படுத்தாத, எதிரிக்கு எந்தவித அழுத்தத்தையும் ஏற்படுத்தாத, எதிரியின் ஆட்சி அதிகார முறைக்கு எந்த பங்கத்தையும், இடையுறையும் ஏற்படுத்தாத ஒரு போராட்டத்தை தமிழரசு கட்சி அறிவித்து நடத்தி இருக்கிறது என்றால் இந்த தமிழரசு கட்சிக்காரர்கள் யாருடைய பக்கத்தில் நிற்கிறார்கள்? இவர்களுடைய செயல் யாருக்கு சேவகம் செய்கிறது? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தப் போராட்டம் சிங்கள மக்களுக்கு, சிங்கள அரசாங்கத்துக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல அது தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சனைக்கு இடையூறாகவும், தமிழ் மக்களை இம்சை படுத்துவதாகவும், அரசியலின் பெயரால் அன்றாட தின கூலிகளையும் சந்தை வியாபாரிகளையும் நிர்ப்பந்திகின்ற வயிற்றில் அடிக்கின்ற செயலாக மட்டுமல்லாமல் அவர்களை அச்சுறுத்துகின்ற அழுத்தத்தை கொடுக்கின்ற வகையிலுமே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் சுண்ணாகம், மருதணமடம், சாவகச்சேரி சந்தைகள் பூட்டப்பட வேண்டுமென தமிழரசு கட்சியின் பிரதேச சபை தவிசாளர்கள் வியாபாரிகளை நிப்பந்தித்தன்மையை சுயாதீன ஊடகங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றனர். அவ்வாறே மட்டக்களப்பிலும் நிகழ்ந்திருக்கிறது. மன்னாரிலும் அத்தகைய நிகழ்வுகள் பதிவாகியிருக்கிறது.
மேலும் கதவடைப்பு போராட்டம் என்று சொல்லிவிட்டு அதனை மதியத்துடன் முடிவுக்கு கொண்டு வருவதாகவும் அறிவித்துவிட்டது. அதவடைப்பு போராட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற அறிவற்ற அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயக வழி போராட்டங்கள் பற்றி எந்த பார்வையும் அற்றவர்களாலேயே இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு கதவடைப்பு போராட்டம் நடத்துவதற்கு எடுக்க வேண்டிய கால அவகாசம், செய்யப்பட வேண்டிய முன் ஆயத்தங்கள், அவசர சேவைகள் பற்றிய முன்னாயத்தங்கள் எதுவுமற்று திடீரென போராட்டத்தை அறித்திருக்கிறார்கள். அதுவே இந்த கதவடைப்பு போராட்டம் வெற்றி பெறாது என்பதை முன்கூட்டியே தெரிந்து விட்டது. அதனால்த்தான் போராட்டத்திற்கு யாரும் ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. வர்த்தகர்களும், வர்த்தக சங்கங்களும் தமிழரசுக் கட்சியுடன் முட்டி மோதி எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஆகவேதான் நடந்து முடிந்த கதவடைப்பு என்பது அன்றாடம் காலையில் கூடும் தினச்சந்தைகளின் வியாபாரிகளை முடக்குவதாகவும், மாநகர, நகர, பிரதேச சபைகளின் கட்டுப்பாட்டில் உள்ள வியாபார தளங்களை முடக்குவதுவாகவே அமைந்ததை காண முடிகிறது. இதிலிருந்து தமிழரசு கட்சியின் அரசியல் என்பது இப்போது தனக்கு கிடைக்கப் பெற்று இருக்கின்ற உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை அந்தந்ந இடங்களிலே தவறாக பிரயோகிக்கின்ற நடைமுறை நோக்கி செல்வதாகவே அமைந்துள்ளது.
ஆகவே இந்தப் போராட்டத்தின் பின்னணியை தமிழ் மக்கள் சந்தேகத்துடன் பார்க்க வேண்டும். உண்மையில் திடீரென இந்தப் போராட்ட அறிவிப்பு என்பது அதுவும் புதிய இடதுசாரி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் முதலாவது தடவையாக தமிழ் மக்களின் சாத்வீகப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்கின்ற இனிமேலும் ஒரு போராட்டம் நடத்தப்படக் கூடாது என்ற ஒரு சூழலை தோற்றுவிப்பதற்கான ஒரு திட்டமிட்ட சதியாகவே இதனை பார்க்கப்பட வேண்டும்.
இந்தப் போராட்டத்தை திரு சுமந்திரன் அவர்கள் அறிவித்த விதமும், அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும், அவருடைய கூற்றுக்களும் அவர் இலங்கை அரசாங்கத்தின் கையாள் என்பதையும், அரசாங்கத்தின் அனுசரணையுடன், அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த போராட்டத்தை அறிவித்திருக்கிறார் என்பதையும் தெளிவாக காட்டுகிறது. இப்போது நண்பனின் வடிவில் தமிழ் மக்களிடம் உலாவும் எதிரி உருவாக்கப்பட்டு இருக்கிறார் என்று சொல்வதே சாலப் பொருந்தும். காலத்துக்கு காலம் தமிழ் மக்களிடையே கோடாலிக் காம்புகள் முளைத்தெழுவது வழக்கம்தான் ஆனாலும் அவற்றைக் களைந்தெறிந்து தமிழ் மக்களுடைய விடுதலைக்கான பயணம் தொடரும். தொடரப்பட வேண்டும். எனவே இத்தகைய விவகாரங்களில் தமிழ் மக்களை தத்துவார்த்த அரசியல் மயப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது. எல்லாப் போராட்டங்களுக்குமான மூலத்தை தமிழ் மக்கள் கண்டறிய வேண்டும். அந்த மூலத்தை கண்டறிவதற்கான அரசறிவை தமிழ் மக்களுக்கு புகட்ட வேண்டியது என்ற காலத்தின் தேவையாக உள்ளது.
மக்கள் எழுச்சி போராட்டங்களையோ, அல்லது மக்கள் இயக்க போராட்டங்களையோ நடத்துவதற்கு களச்சூழலில் இருக்கின்ற மக்களின் மனநிலையும், அந்தச் சூழலில் நிகழ்ந்த நிகழ்வுகளும் அடிப்படையாக அமையும். சூழலின் அகப்புற நிலைமைகளின் அடிப்படையில்தான் மக்கள் மனவுணர்வின் வெளிப்பாடாக மக்கள் இயக்கமாக தெருவில் இறங்கி போராடுவார்கள்.
அத்தகைய மக்கள் இயக்கங்களுக்கு தலைமைகள் என்றோ அல்லது அதற்கான கட்டமைப்புகளோ தேவையில்லை. அது மக்கள் உணர்வுகளின் அடிப்படையில் தேசியமாகத் திரண்டு எழுந்து கிளர்ச்சி செய்வது. அது இந்திய விடுதலை போராட்டத்தில் நிகழ்ந்தது. அதேபோல பக்தி இயக்கங்களும் மக்கள் இயக்க போராட்டங்களாகவே மேற்கொள்ளப்பட்டன. அவை தொடர்ந்தும் நீண்ட காலத்துக்கு நின்று நிலைக்க வல்லன.
ஆனால் ஈழத்தமிழர்கள் அரசியல் உரிமைக்காக சாத்வீக வழியிலும் ஆயுத வழியிலும் போராடி தோல்வியடைந்த அல்லது தோற்கடிக்கப்பட்ட முடக்கப்பட்டுள்ளார்கள். ஆயினும் தமிழ் சமூகம் முடங்கிப் போகாமல் தொடர்ந்தும் போராட்ட குணத்தோடு இருக்கின்றது என்ற அடிப்படையில் தமிழ் மக்களை சரிவர திட்டமிட்டு வெற்றியை இலக்கு வைத்தே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ""வெற்றி தோல்விகளை நாங்கள் பார்த்து போராட்டத்தை அறிவிக்கவில்லை"" என சி வி கே சிவஞானம் அவர்கள் கூறிய கூற்று தமிழ் மக்களை தலைமை தாங்க ஒரு அப்பகோப்பை வந்துவிட்டது என்பதை வெழிகாட்டி நிற்கிறது. சிங்கக் கூட்டத.திற்கு தலைமை தாங்க ஒரு நரி வந்து நின்று சிங்கவேடம் போட்டு இருப்பதாகவே அர்த்தப்பட வேண்டும்.
ஆகவே தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தத்துவார்த்த அரசியல் அறிவு மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் தேவையாக உள்ளது. தமிழ் மக்களிடம் இருக்கின்ற பழமையான மிதவாத அரசியல் தலைமைகளும், கட்சிகளும் தமிழ் மக்களுக்கு விரோதமாக செயல்படுவதோடு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் பங்குதாரர்களாகவும் மாறிவிட்டார்கள். நஞ்சை மருந்தாகவும் கொளஞ்சியனை நீதிபதியாகவும் சதிகாரர்களே தலைவர்களாகவும் தமிழ் மக்கள் முன் காட்சியளிக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ்த் தேசியம. மீள்கட்டுமானம் செய்யப்பட வேண்டும் என வரலாறு தமிழ் தேசிய இனத்தை நிர்பந்திக்கிறது.




