SuperTopAds

கைத்துப்பாக்கிக்கு விண்ணப்பிப்பது வேறு, கையில் வைத்திருப்பது வேறு! - அனந்தியின் விளக்கம்!

ஆசிரியர் - Admin
கைத்துப்பாக்கிக்கு விண்ணப்பிப்பது வேறு, கையில் வைத்திருப்பது வேறு! - அனந்தியின் விளக்கம்!

ஆயுதத்திற்கு விண்ணப்பிப்பது வேறு. அதனை கையில் வைத்திருப்பது வேறு. அந்த விளக்கங்கள் தெரியாது விவாத பிரதி வாதங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன என்று வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவி அவர் ''நான் செல்கின்ற இடம் எல்லாம் துப்பாக்கி விவகாரம் தொடர்பில் என்னிடம் கேட்கப்படுகின்றது. ஆயுதத்திற்கு விண்ணப்பிப்பது வேறு. அதனை கையில் வைத்திருப்பது வேறு. ஆனால் அந்த விளக்கங்கள் தெரியாது விவாத பிரதி வாதங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.

திட்டமிட்ட வகையில் அடுத்த மாகாணசபை தேர்தல் வருகின்ற போது எனக்கு மக்கள் மத்தியில் இருக்கின்ற நன்மதிப்பை குறைப்பதற்காகவும், மறை முகமாக எனக்கு ஓர் உயிர் ஆபத்தை ஏற்படுத்தவும் முன்னெடுக்கப்பட்ட ஒரு விவாதம்.

தற்போது புதிது புதிதாக உண்மைக்கு புறம்பான பல கருத்துக்களை சில பக்கங்களில் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் எது எவ்வாறாக இருந்தாலும் பொய்கள் எப்போதும் உரத்து கூறப்பட்டாலும் கூட உண்மை ஒரு நேரம் வெளிவரும்.

அதன் அடிப்படையில் எல்லாவற்றையும் நான் அரசியலுக்கு வந்த பிறகு எதிர் கொள்ளத் தயாராக வந்திருக்கின்றேன். மக்கள் மிகத்தெளிவாக விளங்கி இருக்கின்றார்கள் இந்த பிரச்சினைகளின் சூத்திரதாரி யார்? என்று. இந்த கூச்சல் குழப்பத்திற்கு நாள் அஞ்சப்போவது இல்லை. ஆனால் மக்கள் எதிர்வரும் தேர்தலில் அவர்களுடைய தீர்ப்பை மிக நிதானமாக வழங்குவார்கள்.

அடுத்த மாகாணசபை தேர்தலில் பல கட்சிகளும், மக்களும், அமைப்புக்களும் கூட முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சராக தேர்தலில் களமிறங்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருக்கின்றார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.