SuperTopAds

வடக்கில் வூசூ அமைப்பு முன்னெடுக்கவுள்ள செயற்றிட்டங்கள்

ஆசிரியர் - Editor II
வடக்கில் வூசூ அமைப்பு முன்னெடுக்கவுள்ள செயற்றிட்டங்கள்

வடக்கு மாகாணத்தில் அமையவுள்ள முதலீட்டு வலயங்கள் தொடர்பிலும், இதற்குரிய மனிதவளத்தை தயார் செய்யவேண்டியுள்ளமை தொடர்பிலும் வூசூ அமைப்பினருக்கு வடமாகாண ஆளுநர் எடுத்துக்கூறியுள்ளார்.

வடக்கு மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் முன்னெடுக்கவுள்ள தொழில்வழிகாட்டல் மற்றும் தொழில்திறன் வலுவூட்டல் திட்டங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், வூசூ (WUSC) அமைப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இந்தக் கலந்துரையாடலில் வூசூ அமைப்பு வடக்கில் முன்னெடுக்கவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பில் அந்த அமைப்பினரால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. 

பாடசாலைகளிலிருந்து இடைவிலகியோர், இளையோருக்கு தொழில்வழிகாட்டல் மற்றும் அவர்களின் தொழில்திறன் வலுவூட்டல் திட்டங்களை எதிர்காலத்தில் அரச நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்டனர். 

இதேவேளை, வடக்கு மாகாணத்தை நோக்கிய முதலீட்டாளர்களின் வருகை மற்றும் எதிர்காலத்தில் இலங்கை முதலீட்டுச் சபையின் ஊடாக வடக்கு மாகாணத்தில் அமையவுள்ள முதலீட்டு வலயங்கள் தொடர்பில் தெரியப்படுத்திய ஆளுநர், இதற்குரிய மனிதவளத்தை தயார் செய்யவேண்டியுள்ளமையையும் சுட்டிக்காட்டினார். 

அதற்கு வூசூ அமைப்பு முன்னெடுக்கும் திட்டங்கள் ஒத்துழைப்பாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார். 

வூசூ அமைப்பின் சார்பில் ஸ்ரீவ் மஸோன் மற்றும் சிவாஞ்சலி சிவசண்முகப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.