ஒற்றுமையை விரும்பாதவர்களோடு ரெலோ ஒருபோதும் தொடர்ந்து பயணிக்காது!
ஒற்றுமையை விரும்பாதவர்களோடு ரெலோ ஒருபோதும் தொடர்ந்து பயணிக்காது என்று அந்தக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை நினைவு கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுபோட்டியின் ஆரம்ப நிகழ்வு மன்னார் நகரசபை மைதானத்தில் நடைபெற்றது. அந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய அடைக்கலநாதன், "எங்களுக்குள்ளேயே நாங்கள் விமர்சனம் செய்பவர்களாக, எங்களுக்குள்ளேயே நாங்கள் சண்டை பிடிப்பவர்களாக மாறியிருக்கின்றோம். எங்களினுடைய இனத்தின் விடுதலை என்பதை மறந்திருகின்றோம் என்பதை மிக கவலையோடு தெரிவித்து கொள்கின்றேன்.
ஆகவே இவர்களின் படுகொலை செய்யப்பட்ட நாளிலே விடுதலை போராட்டம் ஆயுத முனையிலே திருப்பப்பட்டது. இந்த 83ஆம் ஆண்டில் எங்களுடைய மக்களினுடைய விடுதலைக்காக இளைஞர்கள் ஆயுதங்களை தங்களினுடைய கைகளில் எடுத்தார்களோ அதே போல ஜனநாயக ரீதியில் இப்பொழுது இருக்கின்ற கட்சிகள் ஒன்றாக இணைந்து எங்களினுடைய மக்களினுடைய விடுதலைக்காக செயற்பட வேண்டும். தேசியத்தை கருத்தில் கொண்டவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.
இன்றைக்கு மாகாண சபை இரண்டு மூன்று பிரிவுகளாக செயற்பட போவதாக பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருகின்றது. இந்த மாகாண சபையானது எங்களுடைய தமிழர்கள் ஆழக்கூடிய வடக்கு மாகாண சபை அதனை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது. எங்களுடைய மக்களுடைய எண்ணங்கள், சிந்தனைகள், அவர்களுடைய அடிப்படை வாழ்க்கை, அவர்களுடைய அரசியல் விடுதலை என்பது இந்த மாகாண சபையினூடாகவும் செயற்படக்கூடிய திறன் இந்த மாகாண சபைக்கு இருக்கிறது.
ஆகவே வருகின்ற மாகாண சபையிலே நாங்கள் பிரிந்து நின்றோம் என்றால் இப்பொழுது இருகின்ற நகரசபை, பிரதேச சபை போன்று தென்னிலங்கையில் இருகின்ற ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எப்படி இந்த நகரசபை, பிரதேச சபை தேர்தலில் தங்களுடைய காலை பதித்தார்களோ அதைவிட மோசமாக ஆட்சியை அவர்களோடு பேசி ஆட்சி நடத்தக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு இந்த மாகாண சபை தள்ளப்படக்கூடிய வாய்ப்பை ஒருகாலும் அவர்களுக்கு விட்டுக்கொடுக்க முடியாது.
நாங்கள் தொடர்ந்தும் இந்த மாகாண சபையை ஒரு வல்லமை கொண்ட மாகாண சபையாக ஆட்சி நடத்தக்கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டவர்களாக திகழவேண்டுமாக இருந்தால் நாங்கள் எங்களுக்குள் ஒற்றுமைப்பட வேண்டும்.
எங்களுடைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏனைய கட்சிகள் எல்லோரும் இந்த மாகாண சபையிலே ஒன்றிணைந்து எங்களுடைய ஆட்சியை நாங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் அதற்காக இந் நாளிலே தமிழீழ விடுதலை இயக்கம் நிச்சயமாக செயற்படும் ஒற்றுமை வரவில்லை என்றால் அந்த ஒற்றுமையை விரும்பாதவர்களோடு ஒருகாலும் தொடர்ந்து பயணிக்காது என்பதனை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
ஒற்றுமை என்பது மக்களினுடைய கனவு, மக்களினுடைய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக தான் ஜனநாயக ரீதியாக வந்தாலும் சரி, ஆயுத ரீதியாக வந்தாலும் சரி ஒரே இலட்சியம் மக்களினுடைய விடுதலை. ஆகவே அதனை மனதில் கொண்டு செயற்படுவதற்கான சிந்தனையோடு அனைத்து தமிழ் கட்சிகளும் இருக்க வேண்டும். தேசியத்தை நினைக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து எங்களினுடைய மாகாண சபையை நல்லதொரு ஆட்சியை நடத்தக்கூடிய ஒரு இலக்கை கொண்டு வரவேண்டும் அத்தோடு கிழக்கு மாகாணத்திலும் ஆட்சியை நடத்தக்கூடிய வல்லமையை நாங்கள் கொண்டுள்ளோம்.
அதற்கும் எங்களினுடைய இந்த ஒற்றுமையான செயற்பாடு தான் கைகொடுக்கும் என்பதனை குறிப்பிட விரும்புகின்றேன்" என தெரிவித்தார்.