கொரோனா நோயாளருக்கான சேவையில் இருந்து பொது சிகிச்சைக்கு இரண்டு வைத்தியசாலைகள் மீள திரும்பியது
மருதமுனை பிரதேச வைத்தியசாலையும் பாலமுனை பிரதேச வைத்தியசாலையும் கோவிட் நோயாளர்களின் பராமரிப்பு சேவையில் இருந்து பொது வைத்திய சேவைக்கு மீள மாற்றப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிட்டதாவது
கொரோனா நோயாளர் பராமரிப்பு சேவையில் முற்றுமுழுதாக தன்னை அதிகம் ஈடுபட்டுக்கொண்டு வெற்றிகரமாக தேசிய நெருக்கடியின்போது அனைத்து இன மத பிரதேச வேறுபாடுகளின்றி எல்லா இலங்கை நாட்டு மக்களுக்கும் தனது சிறந்த சேவையை வழங்கி இந்த தொற்று நிலை குறைந்து இருக்கின்ற இந்த தருணத்தில் புத்தாண்டில் இருந்து தனது சாதாரணமான மருத்துவ சேவையினை வைத்திய சேவையை வழங்குவதற்கு இந்த இரண்டு வைத்தியசாலைகளும் ஆரம்பிக்க வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் கோவிட் நோயாளர்களுக்காக அந்த வைத்தியசாலைகள் தற்போதைக்கு பயன்படுத்தப்பட மாட்டாது. மருதமுனை வைத்தியசாலை இன்னுமொரு இடத்தில் இடம் பெயர்ந்து தனது சேவையை கொடுத்துக் கொண்டிருந்தது. பாலமுனை வைத்திய சாலையும் அப்படித்தான் மனநோய்க்கான உள சிகிச்சை பிரிவில் தனது கடமையை வழங்கிக் கொண்டிருந்தது. இனி அவர்களுடைய நிரந்தர வைத்தியசாலைகளில் அந்த பொது சிகிச்சைகளை வழங்குவார்கள். பொது மக்கள் அங்கு வைத்திய சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.