சீனாவுடன் நட்புறவு - பாதகமாக அமையும்!

ஆசிரியர் - Admin
சீனாவுடன் நட்புறவு - பாதகமாக அமையும்!

இதுவரை காலமாக தமிழர்களின் நலன்களில், அரசியல் தீர்வு விடயங்களில் அக்கறை செலுத்தாத சீனா தற்போது வடக்கில் கவனம் செலுத்த வேண்டிய தேவை என்னவென கேள்வி எழுப்புவதாகவும், இந்தியாவை விடுத்து சீனாவுடன் நட்புறவை கையாள்வது எமக்கு பாதகமாக அமையும் எனவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 கடந்த வாரம் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்ட சீனத்தூதுவர் கீ சென் ஹொங் வடக்கில் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் தமிழர் அரசியல் தரப்பு இதனை விமர்சித்துள்ளது.  இந்நிலையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

 அவர் மேலும் கூறினார், தற்போதைய நிலைமையில் சீனத்தூதுவரின் வடக்கு விஜயம் குறித்து எம்மத்தியில் பல கேள்விகள் எழுகின்றன.  இதுவரை சீனாவினால் எந்த ஒத்துழைப்புகளும் எமக்கு கிடைக்காத நிலையிலும், எமது அரசியல் பிரச்சினைகள் குறித்து இதுவரை சீனாவின் கவனம் செலுத்தாத நிலையிலும் தற்போது வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனத்தூதுவர், வேட்டி கட்டிக்கொண்டு நல்லூர் கோவிலுக்குச் செல்வதும், எமது மீனவர்களின் உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதும் ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 தற்போதுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கும் சீன அரசாங்கத்திற்கும் இடையில் சில பிணக்குகள் இருக்கின்ற காரணத்தினால், இவ்வாறான ஒரு சூழலில் தமிழ் மக்களை ஈர்க்கும் விதமாக சீனாவின் நகர்வு அமைந்துள்ளது

 இந்திய - சீன முரண்பாடுகளில் எம்மை பகடைக்காய்களாக மாற்றிக்கொள்ள கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.  எம்மை பொறுத்த வரையில் தமிழ் மக்களுடன் இந்தியா மிக நெருக்கமாக செயற்பட்டு வருகின்றது.

 எமது உள்ளக விவகாரங்களில் அவர்களின் ஆர்வமும் தலையீடும் காணப்படுகின்றது.  இவ்வாறான நிலையில் நாம் இந்தியாவை விடுத்து சீனாவுடன் நட்புறவை கையாள்வது எமக்கு பாதகமாக அமையும்.

 மேலும், சீனா எமது மக்களுக்கு உதவிகளை செய்கிறது, மீனவர்களுக்கு உதவி செய்கின்றது என்பதற்காக இந்தியாவை நாம் புறக்கணிக்க முடியாது.  அதேவேளையில் இந்தியா இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 எப்படி இருப்பினும் சர்வதேச பிரச்சினைகளில் தமிழ் மக்களை உள்நுழைந்துவிட்டு இறுதியாக எம்மை பகடைக்காய்களாக மாற்றக்கூடாது எனவும் அவர் கூறினார்.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு