SuperTopAds

கொரோனாவை சுதேச வைத்தியத்தின் மூலம் கட்டுப்படுத்த 1000 வைத்தியர்கள் தயார்-வைத்தியர் ஹபில்

ஆசிரியர் - Editor III
கொரோனாவை சுதேச வைத்தியத்தின் மூலம் கட்டுப்படுத்த 1000 வைத்தியர்கள் தயார்-வைத்தியர் ஹபில்

கொரோனாவை சுதேச வைத்தியத்தின் மூலம் கட்டுப்படுத்த   1000 வைத்தியர்கள் தயாராக உள்ளதாக வேலைவாய்ப்பற்ற சித்தவைத்திய சங்கம் தலைவர்  வைத்தியர் ஹபில் தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது

ஆயுர்வேத, சித்த, யுனானி வைத்திய துறைகளில் பட்டம் பெற்று உள்ளக பயிற்சிகளை நிறைவு செய்த 1000 வைத்தியர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து அரச நியமனம் கிடைக்காமல் வேலைவாய்ப்பற்ற நிலையில் வீட்டில் இருக்கும் துர்ப்பாக்கிய நிலை நம் நாட்டில் மட்டும் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

தற்போதைய கொரோனா இடர் காலத்தை கருத்தில் கொண்டு சுகாதார துறையை வலுப்படுத்த வேலையற்ற சுதேச வைத்தியர்களுக்கு அரச நியமனம் வழங்கி கொரோனா சிகிச்சை நிலையங்களில் சேவையாற்ற வழி செய்வதே அரசின் புத்திசாலித்தனமானதும் ஆரோக்கியமானதுமான முடிவாகும் என நினைக்கிறேன்.

மேலும் இது தொடர்பாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் கொளரவ  சிசிர ஜயகொடி அவர்களுடன் பல முறை பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. மற்றும் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோரின் அலுவலகங்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.

மாறாக அலோபதி துறையில் உள்ளக பயிற்சியை தொடங்காத மாணவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பது மிக்க வேதனை அளிக்கிறது.

நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இலவச கல்வியை கற்று சுகாதார துறையில் தேர்ச்சி பெற்ற வைத்தியர்களாகிய எமக்கு உடனடியாக அரச நியமனம் வழங்கி நாட்டு மக்களுக்கு புத்துணர்ச்சியுடன் சேவையாற்ற உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.