SuperTopAds

நியாயமான தமிழர்களினது உரிமை போராட்டம் நிதானமாக தமிழ் தலைவர்களாலே முன்னெடுப்பு

ஆசிரியர் - Editor III
நியாயமான தமிழர்களினது உரிமை போராட்டம் நிதானமாக தமிழ் தலைவர்களாலே முன்னெடுப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை சிறுபான்மை மக்களின் சிந்தனையை நிச்சயம் புடம் போட்டு இருக்கும் என்று நான் நம்புகின்றேன்

- முன்னாள் அமைச்சர் ஹசனலி கூறுகின்றார்

தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் நியாயமானது. அது தமிழ் தலைவர்களால் நிதானமான முறைகளில் முன்னெடுக்கப்படுகின்றது, இது நிதர்சனமான உண்மை ஆகும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், சுகாதார மற்றும் போஷாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.

வட மாகாணத்துக்கான பிரதம செயலாளராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவால் சமன் பந்துலசேன கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். இது குறித்த அவதனங்களை நிந்தவூரில் உள்ள இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டபோது ஹசன் அலி மேலும் தெரிவித்தவை வருமாறு

92 வீதம் தமிழ் மக்களை கொண்டிருக்கின்ற வட மாகாணத்துக்கு பிரதம செயலாளராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதை எந்த வகையிலும் ஏற்று கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாது. இது இயற்கை நீதிக்கு முரணான விடயமும் ஆகும்.

இதற்கு எதிராக தமிழ் தேசிய கூடமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தலைவர்கள் ஓங்கி குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர். இது எமக்கு பெருமகிழ்ச்சி தருகின்றது. ஏனென்றால் வடக்கில் மாத்திரம் அல்ல கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான அநியாயத்தையே ஆட்சியாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் புதிதாகஉருவாக்கப்பட்ட காலம் தொட்டு அதாவது கடந்த 60 வருடங்களாக அம்பாறை மாவட்டம், திருகோணமலை மாவட்டம் ஆகியவற்றுக்கு தமிழ் பேசும் சமூகங்களில் இருந்து ஒரு அரசாங்க அதிபர்கூட இற்றை வரை நியமிக்கப்படவில்லை. ஆயினும் இந்த அநியாயத்துக்கு எதிராக தமிழ் தலைவர்கள் உரிய அக்கறையை வெளிப்படுத்த தவறி இருந்தனர்.

இருப்பினும் வட மாகாணத்தின் மீது குறிப்பாக யாழ்ப்பாணத்தின் மீது கை வைத்தபோது உரிய அக்கறையை வெளிப்படுத்த தொடங்கி உள்ளனர்.தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆளுனர், அரசாங்க அதிபர், பிரதம செயலாளர் உள்ளிட்ட உயர் நிலை பதவிகளுக்கு தமிழ் பேசும் சமூகங்களை சேர்ந்தவர்கள் பொதுவாக நியமிக்கப்படுவதில்லை என்பதை இந்த இடத்தில் சுட்டி காட்ட விரும்புகின்றேன்.

மொழி, மதம், கலாசாரம் ஆகியவற்றை பின்பற்றுவதற்கு உள்ள உரிமைகள், சுதந்திரங்கள் மதிக்கப்பட வேண்டும். வேறு விதமான விடயங்கள் திட்டமிட்டு திணிக்கப்பட கூடாது. அதே போல சாதாரண பொதுமக்கள் அவர்களுடைய பிரச்சினைகளை உயரதிகாரிகளுக்கு நேரடியாக சொல்வதற்கான உரிமைக்கு உரித்துடையவர்கள். ஆயினும் இவ்வாறான உரிமைகள், சுதந்திரங்கள் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்ற மாகாணங்களில் மழுங்கடிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.

பாராளுமன்றத்தில் அண்மையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை சிறுபான்மை மக்களின் சிந்தனையை நிச்சயம் புடம் போட்டு இருக்கும் என்று நான் நம்புகின்றேன். தமிழ், முஸ்லிம் மக்களை அரசாங்கம் எதிரிகளாக பார்த்து நடப்பதாகவே தோன்றுகின்றது, எந்த நாட்டுடன் சண்டை பிடிப்பதற்காக தற்போது பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகப்படியான நிதி வரவு - செலவு திட்டத்தில் அரசாங்கத்தால் ஒதுக்கி கொடுக்கப்பட்டு உள்ளது? என்கிற சாரப்பட அவரின் உரை அமைந்தது.