SuperTopAds

கொரோனாவின் தாக்கத்தினால் இழந்த எந்த விடயத்தையும் நாம் மீள பெற்றுக்கொள்ள முடியும்

ஆசிரியர் - Editor III
கொரோனாவின் தாக்கத்தினால் இழந்த எந்த விடயத்தையும் நாம் மீள பெற்றுக்கொள்ள முடியும்

 ஆனால்   இழந்த உயிரினை  மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது-வைத்தியர்  குணசிங்கம் சுகுணன் 



கொரோனாவின் தாக்கத்தினால் இழந்த  எந்த விடயத்தையும் நாம் மீள பெற்றுக்கொள்ள முடியும் ஆனால் தேகஆரோக்கியத்தையோ அல்லது இழந்த உயிரினையோ நாம் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது என கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர்  குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார் .

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று நடாத்திய விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது

கொரோனா அபாயம் கூடிய  கிராம சேவகர் பகுதிகளில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதன் முதலில் தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றது.அத்துடன் கர்ப்பிணிகளுக்கும் வழங்கப்படவுள்ளது.அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றுபவர்கள் ஆகியோருக்கும்  தடுப்பூசி வழங்குவதில் முதன்மைப்படுத்தி இருக்கின்றார்கள்.ஏனையோருக்கு கட்டம் கட்டமாக தடுப்பூசிகள் கொடுக்கப்படும் .முக்கியமாக எமது பிராந்தியத்தை பொறுத்தவரையில் 50ஆயிரத்தை தாண்டியவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.20 ஆயிரம் அரச உத்தியோகத்தர்களும் உள்ளனர்.கர்ப்பிணிகளும் 2 ஆயிரம் அளவில் காணப்படுகின்றனர்.எமக்கு கிடைக்கின்ற தடுப்பூசிகளின் எண்ணிக்கையை  பொறுத்து அவற்றை முன்னிலைப்படுத்தவுள்ளோம்.மிகவிரைவில் தடுப்பூசி வரவிருக்கின்றது.

எனவே பொதுமக்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் எமது பிராந்தியமான பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரை பெற்றுச்செல்ல முயல வேண்டும்.இவ்விடயத்தை பிரயோசனமான முறையில் நாம் பயன்படுத்த வேண்டும்.மேலும் எமது நாட்டில் கொவிட் 19 இனை கட்டுப்படுத்துவதற்காக இரு வாரங்கள் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியவசியத் தேவை தவிர்ந்த ஏனைய அனைத்து விடயங்களும் முடக்கப்பட்டு உள்ளன.இச்செயற்பாடுகள் எமது நாட்டினை கொரோனாவில் இருந்து காப்பாற்றும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.எந்த விடயத்தையும் நாம் மீள பெற்றுக்கொள்ள முடியும் ஆனால் தேகஆரோக்கியத்தையோ அல்லது இழந்த உயிரினையோ நாம் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது.

இந்த நிலையில் கல்முனை பிராந்தியத்தில் எமது கொரோனா  ஒழிப்பு செயற்பாட்டினை சிலர் முடக்குவதற்கு முயற்சி செய்கின்றார்கள்.இவ்விடயம் எமக்கு கவலையளிக்கின்றது.இதை விட மதத்தலங்கள் பள்ளிவாசல்களில் சிலர் மறைமுகமாக பிரார்த்தனையில் ஈடுபடுவது கவலையளிக்கின்றது.பிரத்தியேக கல்வி நிலைய செயற்பாடுகளில் சிலர் இயங்கி வருவதும் நிறுத்தப்பட வேண்டும்.வீதிகளில் மக்கள் எவ்வித அத்தியவசிய தேவையின்றி அலைந்து திரிவது இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் உலா வருவது கடற்கரையில் திரிவது போன்ற செயற்பாடுகள் விஞ்சி செல்கின்றது.

மேலும் கல்முனை பிராந்தியத்திற்கு உட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி பகுதியினை தனிமைப்படுத்தி வைத்திருப்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.இவ்வாறான பகுதிகள் போல் ஏனைய பகுதிகளும் தனிமைப்படுத்தல் சட்டத்தில் முடக்கப்படும் என்ற நிலையில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றார்கள்.இது தவிர சம்மாந்துறை இறக்காமம் கல்முனை பகுதிகள் எமது அவதானத்துக்கு உட்பட்ட பகுதிகளாக அடைளாளப்படுத்தப்பட்டுள்ளது.மக்கள் இதை உணர்ந்தவர்களாக சுகாதார தரப்பினர் பொலிஸார் இராணுவத்தினருக்கு ஒத்துழைப்புகளை வழங்க   முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.