அரியாலை இளைஞர் கொலை சம்பவம் ; சந்தேகநபர்கள் விடுதலை!

ஆசிரியர் - Admin
அரியாலை இளைஞர் கொலை சம்பவம் ; சந்தேகநபர்கள் விடுதலை!

யாழ்ப்பாணம் – அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, சிறப்பு அதிரடிப் படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளசந்தேகநபர்கள் இருவரும் தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பணம் மற்றும் 5 லட்சம் ரூபா சரீர பிணைகளில் விடுதலை செய்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப்பகுதியில் வைத்து கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி டொன் பொஸ்கோ டினேசன் என்ற இளைஞர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாண தலைமையக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு பின்னர் பொலிஸ் மா அதிபரின் பணிப்பின் பேரில் கொழும்பு குற்ற புலனாய்வு விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தக் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரி உள்பட இருவர் கைது செய்யப்பட்டு சுமார் 5 மாதங்களாக யாழ்ப்பாணம் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் அவர்கள் சார்பில் சட்டத்தரணி மோகனதாஸ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்தார். இந்த பிணை மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் இன்று ஆராயப்பட்டது. இதனையடுத்து சந்தேகநபர்கள் இருவரும் இருவரும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பணம் மற்றும் 5 லட்சம் ரூபா சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டதுடன் சந்தேகநபர்கள் இருவரும் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை. 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடைப்பட்ட நேரப்பகுதியில் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கையொப்பமிடவேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

அத்துடன் இருவருக்கும் வெளிநாடு செல்லத் தடை விதித்தும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பிணை வழங்கியுள்ளார்.