பஸ் சாரதியைத் தாக்கிய பொலிஸ் சிஜடி உள்ளிட்ட இருவருக்கு 2 மாத சிறை!

ஆசிரியர் - Admin
பஸ் சாரதியைத் தாக்கிய பொலிஸ் சிஜடி உள்ளிட்ட இருவருக்கு 2 மாத சிறை!

யாழ்ப்பாணம் நகரிலுள்ள தனியார் பேருந்துத் தரிப்பிடத்தில் வைத்து சாரதியைத் தாக்கிய குற்றத்துக்கு பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் மற்றும் அவரது முகவராகச் செயற்பட்டவருக்கு தலா இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அத்துடன், சாரதி மற்றும் நடத்துனரை அச்சுறுத்திய குற்றத்துக்கு தலா ஆயிரத்து 500 ரூபா தண்டம் செலுத்துமாறும் நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள தனியார் பேருந்துத் தரிப்பிடத்தில் சேவைக்காக தரித்துநின்ற பேருந்தின் சாரதியையும் நடத்துனரையும் அச்சுறுத்தி சாராயம் வாங்கித்தருமாறு இருவர் வற்புறுத்தினர்.

சாரதி அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார். அதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் இருவரும் சாரதி மீது தாக்குதல் நடத்தினர்.

இந்தச் சம்பவம் 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றது. அது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் மற்றும் அவரின் முகவர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
சாரதி மற்றும் நடத்துனரை அச்சுறுத்தியமை மற்றும் சாரதியைத் தாக்கியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் இரண்டு குற்றச்சாட்டுகளிலும் இருவரையும் குற்றவாளிகள் என நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.

“குற்றவாளிகள் இருவரும் முதலாவது குற்றத்துக்காக தலா ஆயிரத்து 500 ரூபா தண்டம் செலுத்தவேண்டும். இரண்டாவது குற்றத்துக்காக குற்றவாளிகள் இருவருக்கும் 2 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது” என நீதிவான் தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு