அம்பாறை கலவரம் தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அம்பாறை விஜயம்
அம்பாறையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒலுவில் பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்தனர்.
ஒலுவில் சுற்றுலா விடுதியில் நடைபெற்ற அம்பாறை இனவாதத் தாக்குதுல் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலிசாஹிர் மெளலானா மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட அம்பாறை நகரத்துக்கு பிரதமரை அழைத்துக் கொண்டு சென்று, முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களைக் காண்பிக்கப் போவதாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் – பல முறை கூறியிருந்த போதும், அது நடைபெறவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் மீதும், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மீதும் கடந்த திங்கட்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வாரம் கழிந்த நிலையில், இந்த கலந்துரையாடல் நடந்துள்ளது.