விடுதலையை துரிதப்படுத்துமாறு அரசியல் கைதிகள் கோரிக்கை!
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பில் உரிய தலைவர்களுடன் கதைத்து விடுதலையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்தார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட் தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார், மன்னார் மெதடிஸ்த திருச்சபையின் போதகர் ஜெகதாஸ் அடிகளார் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன் போதே அவர்கள் தமது விடுதலையை வலியுறுத்தி குறித்த கோரிக்கையை முன் வைத்துள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்றைய தினம் நாங்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடினோம். அவர்களுக்கு தேவையான அவசர உதவிகளை வழங்கி வைத்தோம். அவர்கள் தமது விடுதலையை வலியுறுத்தி பல்வேறு கருத்துக்களை முன் வைத்தனர்.
குறிப்பாக சிலரது வழக்கு விசாரணைகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிலரது வழக்கு விசாரணைகள் நீதிமன்றத்தினால் கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், சிலரது விசாரணைகள் அனுராதபுரம் நீதிமன்றத்தில் இடம் பெற்று வருகின்ற போதும் குறித்த வழக்கு விசாரணையில் என்ன நடக்கிறது என்பது தொடர்பில் தமக்கு எதுவுமே தெரியாது என்றும் அவர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
எனவே அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய தலைவர்களுடன் கதைத்து விடுதலையை துரிதப்படுத்துமாறு அவர்கள் எங்களிடம் கோரிக்கை விடுத்தனர்” என தெரிவித்தனர்.