கட்சியை காப்பாற்ற முடியாத மாவை எமக்காக வருந்துவது நாடகம்! - என்கிறார் சுரேஷ்.

ஆசிரியர் - Admin
கட்சியை காப்பாற்ற முடியாத மாவை எமக்காக வருந்துவது நாடகம்! - என்கிறார் சுரேஷ்.

தமிழ் அரசுக் கட்சியை காப்பாற்ற முடியாத நிலையில் உள்ள மாவை சேனாதிராசா, கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்களுக்காக வருத்தப்படுவது மாபெரும் நாடகம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

”மாவை சேனாதிராசா தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் தொடர்பாக தான் கவலையடைந்திருப்பதாகவும், தேர்தலுக்குப் பின்னர் அவர்களை மீளவும் இணைத்துக் கொள்ள முயற்சி செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.

தமிழரசுக் கட்சியையே காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் தான், மாவை சேனாதிராசா இப்போது இருக்கிறார். இவர்களது வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் பேச முடியாதளவுக்கு கன்னை பிரிந்து நிற்கின்றனர்.

அத்துடன், தமிழ் அரசுக் கட்சியில் தனது தலைமையை தக்க வைத்துக்கொள்வதிலேயே பாரிய சவால்களை எதிர்கொள்ளும் மாவை சேனாதிராச, தேர்தல் வந்தவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்களுக்காக வருத்தப்படுவது என்பது பெரும் நாடகமாகவே தோன்றுகின்றது.

கூட்டமைப்புக்காக ஒரு யாப்பை உருவாக்கி அதனைப் பதிவு செய்து, பொதுச்சின்னம் ஒன்றைப் பெற்றால் தமிழ் அரசுக்கட்சி அழிந்து விடும் என நகைப்புக்கிடமான கருத்தைக் கூறி, பதிவு செய்வதற்கு மறுத்து வருபவர் எவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களை ஒன்றிணைக்க முடியும்?

தமிழ் அரசுக் கட்சியினதும், அவர்கள் இணைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளும் தமிழ் மக்களை வெறுப்படைய வைத்துள்ளன.

இதன் காரணமாகத்தான் மக்கள் முழுமையாக ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து நிற்கின்றனர். அம்மாற்றம் உருவாகியதும் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்க அதில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள அனைவரையும் ஒன்றிணைப்போம்.

அப்போது தமிழரசுக் கட்சியுடனும் பேசுவோம்” என்றும், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு