கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

தூதரகப் பணியாளரின் கணவனையும் வெளிநாடு செல்ல விடாமல் தடுக்க முயற்சி!

ஆசிரியர் - Admin
தூதரகப் பணியாளரின் கணவனையும் வெளிநாடு செல்ல விடாமல் தடுக்க முயற்சி!

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய தமிழ் பெண்ணின் கணவருக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் உள்நாட்டு தமிழ் பெண் ஊழியர் காரில் கடத்தப்பட்டு சில மணிநேரம் தடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப்படுகொலை விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த விடயம் தொடர்பாக மனிதப் படுகொலை விசாரணைப்பிரிவு நேற்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவிற்கு அதன் முதல் அறிக்கையை சமர்ப்பித்தது. இதன்போது அறிக்கையை ஆராய்ந்த நீதவான், குறித்த பெண்ணை டிசம்பர் 9ஆம் திகதிவரை நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் அவரின் கணவருக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும் அந்தப் பெண்ணின் கணவர் கடத்தல் குறித்து சில தகவல்களை அறிந்திருந்தாலும் அவை விசாரணைகளை முன்னெடுத்து செல்லும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையில்லை. எனவே அவருக்கும் பயணத்தடை விதிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை நிராகரிக்கிறேன் என கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன தெரிவித்தார்.

இதேவேளை இவ்விடயம் குறித்து விவரித்த சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலை விசாரணை அதிகாரி ரஞ்சித் முனசிங்க, கடத்தலிற்கு முன்னதாக பெண்ணின் நடமாட்டம் குறித்த கூகிள் வரைபடங்கள், கடத்தலுக்கு பாவிக்கப்பட்ட வாகனத்தின் படங்களை சுவிஸ் தூதரகம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சுவிஸ் தூதரகம் வழங்கிய முறைப்பாட்டில், குறித்த பெண் அதிகாரி வெள்ளை காரில் கடத்தப்பட்டதாகவும் அவரை உள்ளேயே அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் புரிந்துள்ளதாகவும், அவரது கையடக்கத் தொலைபேசி பலாத்காரமாக பறித்து அதில் இருந்த தகவல்களை பெற்றதாகவும் சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் புகுந்துள்ளதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா குறித்து விசாரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தூதுவர் சார்பில் அந்த தூதரகத்தின் இரண்டாம் நிலை அதிகாரி அதில் கையொப்பம் இட்டுள்ளாரென்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கடந்த நவம்பர் 25ம் திகதியே இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுவதுடன் முறைப்பாடு கிடைக்கப் பெற்ற நவம்பர் 27 முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவென சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலை விசாரணை அதிகாரி ரஞ்சித் முனசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “இது தொடர்பாக சி.ஐ.டி. அதிகாரிகள் சுவிஸ் தூதுவருடன் கலந்துரையாடியுள்ளனர். இவ்வாறு கடத்தப்பட்டதாக கூறப்படும் தூதரக பெண் அதிகாரி இலங்கை தமிழ் பெண். அவர் அந்த தூதரகத்தில் விசா அல்லது குடிவரவு விவரங்கள் தொடர்பிலான பிரிவில் சேவையாற்றியுள்ளார். அந்த பெண் தொடர்பிலான அடையாளத்தையும் முறைப்பாட்டின்போது தூதரகம் வழங்கவில்லை.

கடத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் பெண்ணின் கணவர் தனியார் வங்கியில் பணிபுரிகிறார். அவர்களது வீடு மருதானை மாளிகாகந்த பகுதியில் அமைந்துள்ளது. அங்கு அதிகாரிகள் வாக்குமூலம் பெற சென்ற போதும் வீடு பூட்டியிருந்தது.

கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் இதுவரை வாக்குமூலம் வழங்கவில்லை. தூதரகமும் அவரை முன்னிலைப் படுத்தவில்லை. அவர் கணவர், பிள்ளைகள், தாய் தொடர்பாக எந்த தகவலும் இல்லை” என குறிப்பிட்டார்.

இதனையடுத்து நீதவான் லங்கா ஜயரட்ன, சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலை விசாரணை அதிகாரி ரஞ்சித் முனசிங்கவிடம் கேள்விகளை தொடுத்து விடயங்களை தெளிவு படுத்திக்கொண்டார்.

விடயங்களை ஆராய்ந்த நீதவான், “இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் அது பாரிய குற்றமாகும். எனவே பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் முதலில் சி.ஐ.டி.க்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடுகிறேன்.

அவர் வாக்குமூலம் வழங்கும்வரை நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கிறேன். எதிர்வரும் 9 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சி.ஐ.டி.யில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க வேண்டும்” என கூறி வழக்கை எதிர்வரும் 9ம் திகதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Radio
×